இலங்கை பாடசாலை மாணவர்களின் பசி போக்க ஒன்றிணைவோம்.


மாணவர்களின் பசியை உணர்ந்த ஆசிரியரின் அனுபவம் இங்கே உங்களுக்காக.

கடந்த வெள்ளிக்கிழமை காலையில் அவசர கூட்டமொன்றிற்காக மாணவர்கள் கூடியிருந்தனர்.40-45 நிமிடங்கள் கடந்திருக்கும் அதற்குள் எட்டு மாணவர்கள் மயங்கி விழ, ஆசிரியர்கள் அவர்களை தூக்கிப் போகிறார்கள். 


அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு தகவல்களில் தோன்றும் ஒரே ஒற்றுமை என்னவென்றால், "அவர்கள் யாரும் காலை உணவை உட்கொள்ளவில்லை" என்பதுதான்.

"அதையும் கடந்து ஓரிருவர்கள் முதல் நாள் மதியத்தின் பின்னர் கூட எந்த உணவையும் உட்கொள்ளவில்லை" 

அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு தெம்பூட்டப்படுகிறது. 

கதவருகில் ஏதோ அசைவு..

"டீச்சர் ...... எனக்கும் பசிக்கிறது........" 

வாடிய முகம், ஒட்டிய வயிறு, சுருக்கம் படிந்த அழுக்கு சட்டை என்று உரக்கப் பேசிய தருணங்கள்...

ஆயிரம் சீனப்பெருஞ்சுவர்கள்,தாமரை கோபுங்கள் உடைந்து விழுகின்றன, கண்ணெதிரே இருந்த சோற்றுப் பார்சலை கொடுக்கிறேன். 

அதை சரியாக பிரிக்கவும் பொறுமையில்லை. வாயிலுள்ளதை விழுங்க முன் இன்னுமொரு கவளத்தை திணிக்கிறான்.

நம்புங்கள், சமிபாடு நிகழும் என்றிருந்தால்  அவன் லஞ்ச் ஷீட்டையும் சேர்த்து சப்பித் தின்றிருப்பான் பாவம். 

பாடசாலையில் நீண்ட காலைக் கூட்டங்களில் நிற்கின்ற மாணவர்கள் மயங்கி விழுவதும் ,வறுமைக்குட்பட்ட மாணவனொருவனுக்கு உணவு கொடுப்பதும் இந்த நாட்டில் புதிதல்ல. ஆனால் இன்றைய நிலை அதிலிருந்து மோசமானதது. 

ஒட்டுமொத்த தேசமாக நாங்கள் எதிர்நோக்கும் இந்த அவல நிலையில் அதிகம் தண்டனை அனுபவிப்பது யாரென்று தெரியுமா யாருக்கும் எந்தத் தவறும் செய்யாத அப்பாவி குழந்தைகள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

நாளுக்கு நாள் குழந்தைகள் கல்வியில் இருந்து தூரமாகிறார்கள்.  இன்னும் சில வருடங்களின் பின்னார் ஏற்படும்  அதன்  விளைவுகளுக்கு  நாங்கள் கட்டாயம்  முகம் கொடுத்தே ஆகவேண்டும். 

ஆனால் இன்று நான் அதைப்பற்றி பேச வரவில்லை .2 அல்லது 3 நாட்களாக ஒரு பருக்கை சோற்றையாவது கண்ணில் கண்டிராத பல சிறுவர்கள் இலங்கையின் பாடசாலைகளில் வகுப்பறைகள் தினந்தோறும் இருக்கின்றனர்.

அந்த சிறிய வயிறுகள் கத்திக் கொண்டிருந்தும்கூட அதைப் பொறுத்துக் கொண்டு ஆசிரியரை பார்த்து பாடம் படிக்க  முயன்ருகொண்டிருக்கும் எத்தனையோ கள்ளமில்லா சிறுவர்கள் இந்த மண்ணின் பல பாகங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறர்கள். 

பிள்ளையின் பசிக்கு உணவாக எதுவும் கொடுக்க வழியின்றி மூன்று நாட்களாக தண்ணீரை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்த ஒரு தாய் அரளி விதையை உட்கொண்ட செய்தியை நாங்கள் அறிந்திருப்போம். ஆனால்குழந்தையின் பசிக்கு முன் அந்தத் தாய் எவ்வளவு அநாதரவான நிலையில் இருந்திருப்பாள் ?

பசி போக்க வழியொன்றை கண்டிருந்தால் தாயொருத்தி இப்படியானதொரு முடிவை எடுத்திருக்க மாட்டாள் . தான் இறந்து போயாவது சமூகத்தின் பார்வை தன் பிள்ளையின் மேல் விழட்டும் என்று எண்ணியிருப்பாளோ என்னவோ . 

இப்போது இது ஒரு மிகப் பெரிய பிரச்சினை. இதற்குஅரசாங்கம் மதிய உணவு கொடுப்பதாக திட்டங்களை முன் வைக்கலாம். நாங்கள் அதற்குரிய கோடுகளை வரைந்து கொண்டிருக்கலாம் .ஆனால் அதற்கு முன்பதாக இதற்கான தீர்வுகளை நோக்கி நாங்கள் ஒரு குழுவாக இயங்க வேண்டியுள்ளது.

மரவள்ளி, வற்றாளை கிழங்கு, பலா & ஈரப்பலா ஏதோ ஒன்றை  அவித்து வழங்கிடவாவது பெரியவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்திருக்கின்றது .  

வீட்டுக்கொரு  பலாக்காயை அல்லது அரிசியை கொடுத்துவிட்டு பசி போக்கியதாக சொல்லிக் கொள்ள நாங்கள் வெட்கப்பட வேண்டும். பல வீடுகளில் கேஸ் இல்லை, மண்ணெண்ணை சிறிதும் இல்லை,அடுப்பெரிக்க விறகோ எந்தவித வழியோ இல்லை. 

இந்த நாடு கருணை மிக்கவர்களின் நாடாகும். பெட்ரோல் வரிசைகளில் காத்திருப்பவர்கள் நிலையுணர்ந்து அவர்களுக்கு பானங்களும் உணவுகளும் வழங்கும் பெருந்தன்மை மிக்கவர்கள் உள்ள நாடு. போயா தினங்கள் தோறும் பலவழிகளில் பசி போக்கிடும் நல்ல மனங் கொண்டவர்  வாழும் நாடு.

நல்ல எண்ணம் கொண்ட பணக்காரர்கள், நலன்புரிச் சங்கங்கள், நிறுவனங்கள், கிளப்புகள் மற்றும் அமைப்புகள் இருக்கலாம், அவர்கள் அனைவரும் இந்தப் பள்ளிகளுக்கு ஒருமுறை வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கான தீர்வுகளை உடனடியாக தேட வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை மயங்கி விழ விடாமல் தாங்கிப் பிடியுங்கள்.

------------------------------------------------------------ 


பாடசாலை ஒழுக்காற்று குழுக்களே......,

ஆசிரிய பெருந்தகைகளே.......,

சப்பாத்து போட்டு வரவில்லை...

சட்டை கட்டையாய் இருக்கிறது.....

கால்சட்டை ஊத்தையாய் இருக்கிறது......

கொப்பிக்கு  வண்ண வண்ண உறை போடவில்லை....

கடந்த வருட கொப்பியில் எழுதக்கூடாது......

பாடத்திற்கொன்று, பயிற்சிக்கொன்று என இரண்டு கொப்பிகள் கொண்டு வா......

பரீட்சை வினாத்தாளுக்கு 200 /- கொண்டு வா......

பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை....

சிறுவர் சந்தை,விளையாட்டுப் போட்டி நடத்த 500/- கொண்டு வா..... 

என்றெல்லாம் பிடிவாதம்  வேண்டாம். 


தொழில் இல்லாத,

சவர்க்காரம் இல்லாத,

உணவில்லாத, 

மின்சாரம் இல்லாத ...

வீடுகளில் இருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களை நாங்கள் இனங் கண்டு உதவ திட்டமிடவேண்டும்.

சப்பாத்து போடாமல், சீருடையின்றி வருகின்ற மாணவருக்கும் வகுப்பில் இடம் கொடுங்கள்  .

உறை  போடாத புத்தகங்களிலும், கொப்பிகளிலும் படித்துக் கொடுங்கள்.

ஆடை அழுக்காக இருக்கலாம், அதற்காக உள்ளங்களை மாசுபடுத்த தயவு செய்து இடம் கெடுக்காதீர்கள். 


குறிப்பு - (சஞ்சீவனி தகநாயக்க வின் சிங்கள ஆக்கத்தை தழுவி எழுதப்பட்டது.)


Managing Director of 
 Blind Set 
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

இதுபோன்ற தகவல்களைப் எமது வலைப்பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் இதன் மூலம்  பெற்றுக்கொள்ளலாம்.


No comments

Powered by Blogger.